முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. “ஹர” என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே “சங்கடஹர சதுர்த்தி” என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன் என்றருளினார்.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய “ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்” எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
திருவிரட்டை_மணிமாலை)
ஐந்து_கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
(#திருமந்திரம்)
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
(#சேக்கிழார்_ஸ்வாமிகள்)
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
(#ஒளவையார்_மூதுரை)
பாலும்_தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
(#ஒளவையார்_நல்வழி)
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்.
திருவும்_கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
(#விருத்தாசல_புராணம்)
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
விடிவினர் பயில் வலிவல உறை இறையே
(#திருஞானசம்பந்தர்)
நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.
(#அருணகிரிநாதர்_கந்தர்_அநுபூதி)
அடல்_அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே.
(#அருணகிரிநாதர்_கந்தர்_அலங்காரம்)
திகட_சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.
(#கச்சியப்பர்_கந்தபுராணம்)
“நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன், நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் விநாயக!
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.