எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி கடைவீதியின் நடுமையத்தில் வாவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஹரிஹர புத்திரரான ஸ்ரீ தர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் (தங்கும் கூடாரம்) போடாமல் செல்ல மாட்டார்கள்.
ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப்பொடிகள் பூசி வாவரை வணங்கி, பேட்டை துள்ளி பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையையொட்டி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டை துள்ளல் நிகழ்ச்சி
மகர விளக்கு விழாவையொட்டி எருமேலியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் பக்தர்கள் நடத்தும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்கோடு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த பேட்டை துள்ளல் நிகழ்ச்சியின்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் வணங்கினர். சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் சமம் என்பதை விளக்கும் வகையில் சிறியவர்–பெரியவர், ஏழை–பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி முதன் முதல் சபரிமலை செல்லும் கன்னி அய்யப்ப பக்தர்கள் உள்பட அனைவரும் தங்கள் முகம், உடல் முழுவதும் வண்ண வண்ண பொடிகளை பூசிக்கொண்டனர். மேலும், உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு இலை–தழைகளை கையில் ஏந்தியவாறு அய்யப்பனின் சரண கோஷம் முழங்க ஆடி–பாடி எருமேலி கொச்சம்பலத்தில் இருந்து வாவர் கோவிலில் தரிசித்து விட்டு தர்மசாஸ்தா கோவிலுக்கு வந்தனர்.
பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெரும் தவம் செய்து சிவபிரானிடம்; தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக வேண்டும் என்னும் வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்ச்சித்து பார்க்கத் துணிந்தான். சிவபிரான் செய்வது அறியாது திகைத்து நின்ற போது; மகாவிஷ்ணு மோஹினி ரூபமெடுத்து பஸ்மாசுரன் முன் தோன்றி; அவனின் எண்ணத்தை திசை திருப்பி; அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து பஸ்ப மாக்கினார். அந்த மோஹினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் நாராயண மூர்த்தியாகிய மோஹினி மேல் மோகம் கொள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன் அவதரித்ததாக பத்ம புராணம் கூறுகின்றது.
இவ் இரு புராணங்களும் (விஷ்ணு புராணமும், பத்ம புராணமும்) இரு வேறு நிகழ்வுகளைக் கூறினாலும் அவை இரண்டும்; ஐயப்பன் அவதாரம்; நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைந்ததால் அவதரித்த ஹரிஹரபுத்திரன் என்பதை உறுதியாக நிரூபிக்கின்றன. ஹரிஹர புத்திரரான தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயண மூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக (ஐயனாராக) ஆசீர்வதித்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். நாராயண மூர்த்தியின் கையில் அவதரித்தமையால் கைஅப்பன்என்ற பெயர் பெற்றார் என்றும் பின்பு அப்பெயர் மருவி ஐயப்பன் ஆகிற்று என்று கூறுவாருமுளர்
குறுகிய காலத்திலேயே சகல சாஸ்த்திரங்களையும் பிரம்மாவிடம் கற்று “மஹா சாஸ்த்ரு” என்ற நாமத்தையும் பெற்றார். தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன். ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமாகும். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.
கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.
வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
ஞான சாஸ்தா: தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.
பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.
மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.
வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.
தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சபரிமலை யாத்திரை பாகம் – 6 எருமேலி தர்ம சாஸ்தா appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.