என்னை அழைத்தால் உன்னுடன் இருப்பேன்!
கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு. பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதைக் கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.
விளைவு- மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று பின்னால் பெயர் வந்தது.
இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம், ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளை நிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே, உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது.ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப் படுத்தினர்.
அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க… ‘இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி- விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்’ என்றார்.
காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். எத்தனை மகான்கள் தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனித மான இடம்… அவருக்கு மெய்சிலிர்த்தது.
இந்தப் புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவ லிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது.
இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அதுவே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது. இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.
இது என்ன… இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்… இந்தத் தவிப்பு… இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே… இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே. அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ..? உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறுவிதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியாமல் போனது.
மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப் படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்குக் கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது. அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும் மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தைக் கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும்; உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இதுதான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்- தந்தை. ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.
பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. ஊர்மக்கள் ஒன்றுகூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.
பள்ளிக்கூடம் நடக்கத் துவங்கியது. சிறிய வருமானம்; ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.
தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்… அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை… பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீஅரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. தயங்கினார்; குழம்பினார்.
எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார்.
ஆசிரியர் அவரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். மாணவர்கள் காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.
கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது…
ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! இவரே என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச் சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.
ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். ”இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.
உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும்புலப்பட வில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமான வராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.
தங்க நாணய மயமான சிரிப்பு… தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும், திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின் தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.
அவர் கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி. உணவு வாங்க ஒரு கொட்டாங்கச்சி. கையிலே சிறு கோல். இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது.
The post என்னை அழைத்தால் உன்னுடன் இருப்பேன்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.