கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில்
திருமீயச்சூர் பெருங்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன.
திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோயில், திருமீயச்சூர் என்னும் ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பேரளம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 km தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 km தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.
திருமீயச்சூர் பெருங்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன.
முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார். முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.
இக்கோயில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன.
அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார். அன்னையின் திருவாயிலிருந்து வசினீ என்ற தேவதைகள் தோன்றி அவர்கள் துதித்த பாடல்களே சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் எனப் படுகிறது. அம்பாளே அருளிச் செய்ததால் லலிதா சஹஸ்ரநாமம் என்று அழைக்கப் படுகிறது. சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத் திருத்தலம் மீயச்சூர் என விளிக்கப் படுகிறது.
திருக்கோயில் சிறப்பு:
ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீ லலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். ‘அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார். அவ்வாறே அகத்தியரும் இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து பூரண பலனைப் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.
அமர்ந்த திருக்கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார் இத்தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை. நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று விடுவோம் அன்னை லலிதாம்பிகையின் திருமுகத்தைக் காணும்போது. அன்னையைக் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அன்னை லலிதாம்பிகை பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி என எல்லோரும் இணைந்த வடிவமாகத் திகழ்பவள்.
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.