முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரதம்
செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. எல்லா கிரகங்களுக்குமே அதிதேவதை, பிரத்யதி தேவதை என தேவதைகள் சில உண்டு. அதன்படி செவ்வாய்க்கு அதிதேவதை பூமிதேவி ஆவார். செவ்வாய்க்கு பிரத்யதி தேவதை கந்தப்பெருமான் ஆவார். செவ்வாய்க்கும் பூமிக்கும் தொடர்புகள் உண்டு. புராணக்கதைகளின்படி செவ்வாய் பூமியின் மகன்.
நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிக மிக உயர்ந்தது. வீட்டில் இந்த விரதமிருக்கலாம் என்றாலும் வீட்டை விட செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம். செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து, உடல் தூய்மை பெற நீராடி திருநீற்றை பூசி விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும்.
பின்பு ஸ்ரீ பஞ்சாட்ச மந்திரத்தை 108 முறை ஜெபித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன் பிறகு சூரியனைப் பார்த்து ஓம் சிவசூரியாய நம என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து ஓம் வைத்தியலிங்கார்ப்பணம் என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து, உபசரித்தல் நல்லது.
அமுது படைத்து தாம்பூலம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமாக பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்த்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாதத்தை அரை வயிறு மட்டும் உண்டு. அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே வெறும் தரையில் கம்பளம் விரித்துப்படுத்துறங்க வேண்டும். இதுவே செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் முறையாகும்.
செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் அவருக்கு சிவப்பு வர்ணத்துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் சமர்ப்பணம் செய்கிறோம். நவக்கிர ஸ்தலங்கள் ஒன்பதில் செவ்வாய் கிரகத்திற்குரிய தலம் முருகன் சிறப்புடைய ஒரு தலமாக புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன் கோவில் இருக்கிறது. இது செவ்வாய் கிரகத்திற்குரிய நவக்கிரக தலம் ஆகும். ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது. பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவே தனம் செய்வார்கள்.
பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரதம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.