கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கஜேந்திரவரதன் திருக்கோயில், திருமணிக்கூடம்
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை
ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்
கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.
-திருமங்கையாழ்வார்
வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் சோழத் திருப்பதிகளுள் முப்பத்து ஆறாவதாக விளங்கும் இது சீர்காழிக்குச் சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள திருநாங்கூர் திருஷேத்திரத்தில் உள்ள திருத்தலங்களுள் ஒன்றாகும்.
தலபுராணம்
தான் அனைவரிடமும் சமமான அன்பு செலுத்துவதாக வாக்களித்து தக்கனின் 27 பெண்களையும் மணந்து கொண்ட சந்திரன் பிறகு ரோகிணியிடம் மட்டும் மிகுந்த காதலுடன் இருக்கவே, கோபங்கொண்ட தக்கன் சந்திரனின் அழகும் ஒளியும் நாளுக்கு நாள் குறைந்து தேயட்டும் எனச் சாபமிட, அச்சாபத்தைப் போக்க, திருவரங்கம், திருஇந்தளூர் ஆகிய தலங்களில் தொழுது இறுதியில் இங்கு வந்தடைந்து தன் சாபம் முழுதும் நீங்கப் பெற்று மீண்டும் வளர்பிறையானான் என்பது இத்தல புராணம். வரம் தந்த ராஜன் ஆனதால், இத்தலத்து மூலவர் வரதராஜன் ஆனார். கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறார். ஸ்ரீதேவியான தாயார் திருமாமகள் என்று அழைக்கப்படுகிறார்.
தலச்சிறப்பு
தீராத நோய் தீர்க்கும் திருமணிக்கூடம் என்று சொல்லப்படுவதே இதன் பெருஞ்சிறப்பு. சந்திரனின் சாபத்தை விலக்கியதை போல, தன்னை வந்தடையும் பக்தர்களின் உடல், மன நோய் அனைத்தையும் போக்கவல்லார் வரதராஜப் பெருமாள். இப்பிறப்பிலோ, வேறு எப்பிறப்பிலோ பெண்களுக்கு இழைத்த கொடுமைகளால் பாவம் சுமப்பவர்கள் இங்கு வந்து தொழுதால் அப்பாவம் தொடராது முக்தி அடையப் பெறுவர்.
திருமணத் தடை போக்கும் தலம் இது. ஜாதகத்தில் களத்திரம் சரியாக இல்லாதவர்கள், ஊனம் போன்ற ஏதேனும் காரணத்தால் திருமணம் முடியாதிருப்பவர்கள் ஆகியோருக்கு இது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனியுடன் சந்திரன் சேருவதால் உண்டாகும் தடைகளை விலக்கவும் இது பரிகாரத் தலமாகும்.
அணியழகு செய்மார்பில் அலைமகளும் உறைந்திருக்க
மணிக்கூடம் தனில்வாழும் மகராஜன் வரதாபழந்
துணிபோலும் நைந்தகொடும் பிறவியெனும் வினைமிக்கப்
பிணியகற்றிப் பேருள்ளம் கொள்ளாயோ பரந்தாமா.
ஓம் நமோ நாராயணா!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கஜேந்திரவரதன் திருக்கோயில், திருமணிக்கூடம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.