சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்கும் கோமாதா வழிபாடு!
‘பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது’ என்பார்கள். அந்த அளவிற்கு பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு ‘கோமாதா’ என்ற சிறப்பான பெயரும் உண்டு. ‘கோ’ என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். அப்படிக் கடவுளுக்கு நிகரான கோமாதாவின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
கோமாதா
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது நந்தா, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை என்னும் ஐந்து பசுக்கள் தோன்றின. இவற்றின் சந்ததிகளே இன்றளவும் கோமாதாவாக நமக்குச் சகல செல்வங்களையும் அளித்து வருகின்றன. பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடித் தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் வீற்றிருக்கிறார்கள். மேலும் சகல விதமான தெய்வங்களும், பார் போற்றும் முனிவர்களும், நவகிரகங்களும் இருக்கின்றன. கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகிறது. அதனால்தான் கோமாவுக்குப் பூஜை செய்தால், நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது. அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது.
கோமாதாவை வழிபட வேண்டிய முறை:
பசுவை இறைவைனின் வடிவமாகக் கருத வேண்டும். கோமாதா பூஜையின் போது, கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி, கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், மற்றும் பல்வேறு வகையான பழங்களைப் படைக்க வேண்டும். நெய் விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். எடுத்த பின்னர் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின்பு மீண்டும் நெய் தீபத்தால் ஆரத்தி எடுத்து மூன்று முறை கோமாதாவை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜையின் போது கன்றுடன் சேர்த்துதான் பூஜிக்க வேண்டும்.
வீட்டில் பூஜை நடத்த இயலாதவர்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச் சென்று வழிபடலாம். கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கோபூஜையில் வழிபடலாம்.
கோமாதா பூஜை
கோமாதாவை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்:
கோமாதாவைத் தெய்வமாக நினைத்து விரதமிருந்தால், கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். பசுவுக்கு உணவளித்தால் நம் கர்ம வினைகள், சாபங்கள் நீங்கும். எந்தக் கிரகத்தால் நமக்குத் தொல்லையோ அந்தக் கிழமையில் பொங்கல் வைத்துப் படைக்க, கிரக பாதிப்புகள் விலகும். கோமாதாவுக்கு வாழைப்பழத்துடன் வெல்லம் சேர்த்துப் படைக்க பிதுர் தோஷம் நீங்கி புத்திரப் பாக்கியம் உண்டாகும். பாதியில் நின்ற கட்டடங்களில் பசுவைச் சுற்றி வரச் செய்தால் தடை விலகி, நின்ற பணிகள் நிறைவுபெறும். சனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திகீரை கொடுத்துவர, பாதிப்புகள் குறையும். கோபத்தால் விளையும் தீவினைகள் தீரும். கோமாதாவின் பிருஷ்டபாகத்தை வழிபட்டால் முன்ஜன்ம பாவங்கள் நீங்கும். காலையில் கண்விழித்ததும் தொழுவத்தில் பசுவைக் காண்பது சுபசகுனமாகக் கருதப்படும். பசுவை ஒரு முறை சுற்றி வந்தால் உலகம் முழுவதும் சுற்றி வந்த புண்ணியம் உண்டாகும்.
பசுவின் மேன்மைகள்:
பசுவைச் சிறப்பிக்காத புராணங்களே இல்லை எனலாம். ஒரு நாட்டை கைப்பற்றும் மன்னன் , கோடிக்கணக்கில் செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும், அவன் மனம் பசுவைக் கவர்வதிலேயே குறியாக இருக்கும். பசுக்கள் கௌரவத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டது. நீதி கேட்ட பசுவுக்காகத் தன் சொந்த மகனைக் கொன்றான் மனுநீதிச் சோழன். புதிதாகக் கட்டப்படும் வீட்டில், வியாபார ஸ்தலங்களில், தொழிற்சாலைகளில், மணிவிழாக்களில் கோமாதா பூஜையே முதன்மையானதாகும். பசு நன்றாகப் பராமரிக்கப்படும் இடங்களில் சகல சம்பத்தும் கிட்டும் என்பது ஐதீகம். பசுவின் சாணத்தில் லஷ்மி குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பசுவின் கோமியமானது கங்கைத் தீர்த்தம்போல் பாவிக்கப்படுகிறது. பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படும் திருநீறு தெய்விகத்தன்மை உடையது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.