தஞ்சாவூர் மாவட்டம் தென்குடி திட்டையில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு சிவ பெருமாண் மங்களாம்பிகை உடன் வசிஸ்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவர்களுக்கு நடுவில் நின்று குரு பகவான் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் குழந்தை வரம், கல்வி செல்வம், பொருள் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். வசிஷ்ட முனிவர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து தவம் இருந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஆதலால் இந்த தலம் வசிஷ்டாஸ்ரமம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை தென்குடித்திட்டை என்றும் அழைக்கின்றனர்.
பஞ்சலிங்கம்:
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.
மங்களம் தரும் அம்பாள்:
மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.
12 ராசிகளுக்குரிய பல்வேறு சிறப்புகள் பெற்ற அம்பாள் :
சிவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்பாள் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்பாளை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
குரு பார்க்க கோடி நன்மை:
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டு. இங்குள்ள குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆகஸ்டு 2–ந் தேதி தொடங்கியது இதையொட்டி, இத்தல ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு அடுத்த மாதம் 8–ந் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 15–ந் தேதி தொடங்கி 17–ந் தேதி வரை 3 நாட்களுக்கு பரிகார யாக பூஜை நடத்தப்படுகிறது.
மகாவிஷ்ணு உருவாக்கிய சக்கரகுலம்:
இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன. மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்:
மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இங்கு காணமுடிகிறது
The post குழந்தை வரம் தரும் திட்டை குரு பகவான் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.