Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கந்தர் சஷ்டி ஸ்பெஷல்! வேலாயுதம் தோன்றிய வரலாறு !

$
0
0

தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன.

காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர். அவன் தான் பெற்ற வரபலத்தால் எட்டுத் திக்கிலும் படை நடத்தி, எல்லோரையும் அடிமைப்படுத்தினான்.

அவனைக் கண்டு தேவர்கள் ஓடினர். அவர்கள் கடலில் மீனாகவும், காட்டில் பறவைகளாகவும் மறைந்து வாழ வேண்டியதாயிற்று. அவன் இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான். ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர்.

சிவபெருமான், அவர்களிடம், ‘‘அஞ்சாதீர்! அசுரர்களை அழித்து ஒழிக்கத்தக்க ஒருமகனைத் தருகிறேன். அவனால் உங்கள் கவலைகள் விரைவில் தீரும்,’’ என்று கூறித் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அதன் வெப்பம் தாங்காது அனைவரும் பயந்து அங்கிருந்து ஓடினர்.

அக்னிதேவன் அந்த ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருப்பெற்றன. சிவனும், பார்வதியும் அங்கு சென்றனர். பார்வதிதேவியார் அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர வாரி அணைத்தாள். அக்கணத்தில் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு தோள்களும், இரண்டு திருவடிகளும் கொண்ட அழகிய குமரனாகியது. உமையவள் அவனுக்குக் கந்தன் என்று பெயர் சூட்டினாள்.

கார்த்திகைப் பெண்களிடம் அவனை வளர்த்து வரச் சொன்னாள். கந்தனோடு நவவீரர்களும் தோன்றினர். கந்தன் நவவீரர்களுடன் சில காலம் விளையாடி மகிழ்ந்தான். பிரணவத்திற்குப் பொருள் உரைத்தும். நாரதர் செய்த வேள்வியில் தோன்றிய ஆட்டை வாகனமாக ஏற்றும், அவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று, முருகனைத் தங்களுக்குத் தலைவனாக அனுப்பிச் சூரனையும், அவனது கூட்டத்தாரையும் அழித்துத் தமக்கு இன்பம் வழங்கி வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

சிவபெருமான் முருகனை அழைத்து, ‘‘குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக’’ என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு உமாதேவியிடம், ‘‘முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக’’ என்றார். அம்பிகை ஒப்பற்ற ஆற்றல் கொண்டதும், விரைந்து செல்வதும், பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். இதுவே வேல் பிறந்த கதையாகும்.

சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது. கந்தபுராணம் உற்பத்தி காண்டம் – விடைபெறு படலத்தில் சிவபெருமான், முருகப்பெருமானுக்கு ஆயுதங்களை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அது வருமாறு : சூரபத்மன் முதலான கொடிய அரக்கர்களின் சேனையை வெல்லப் போர்க்கோலம் பூண்டு நின்ற முருகப்பெருமானிடம் சிவபெருமான் பதினோரு உருத்திரர்களையும் முறையே, 1. தோமரம், 2. கொடி, 3. வாள், 4. குலிசம், 5. அம்பு, 6. அங்குசம், 7. மணி, 8. தாமரை, 9. தண்டம், 10. வில், 11. மழு எனும் பதினோரு ஆயுதங்களாக்கி அளித்தார்.

பின்பு ஐந்து பூதங்களையும் ஒரு சேர அழிக்கக்கூடியதும் எவர் மேல் விடுத்தாலும், அவருடைய வலிமைகளையும் வரங்களையும் கெடுத்து உயிரைப் போக்கக்கூடியதும் அனைத்துப் படைக்கலங்களுக்கும் தலைமையானதும் ஆகிய வேலாயுதத்தைப் படைத்து முருகக்கடவுளிடம் கொடுத்தார். இதனை,

‘‘ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து
ஐம்பெரும்பூதமும் அடுவது
ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மண்ணியில் உண்பது எப்படைக்கும்
நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான்.’’

– என வரும் கந்தபுராணச் செய்யுளால் அறியலாம். இவ்வாறு சிவபெருமான் முருகனுக்கு வேல் கொடுத்த வரலாற்றைக் கூறுவது புராண மரபு எனப்படும். ஆனால், நடைமுறையில் அன்னை பராசக்தியே முருகப்பெருமானுக்கு வேலாயுதத்தை வழங்கினாள் என்று கூறப்படுகிறது. அதையொட்டியே ஆலயங்களில் அம்பிகையின் சந்நதியில் முருகன் வேல் வாங்கும் ஐதீக நாடகம் நடந்து வருகிறது. முருகனுக்குப் பராசக்தி வேல் தந்ததாகக் கூறும் மரபு ஐதீக மரபு எனப்படும்.

உமாதேவியார் முருகனை அழைத்து, ‘வாழ்க வாழ்க’ என்று சொல்லி, வேல் அளித்ததைப் போற்றி திருச்செந்தூர் திருப்புகழில் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள், ‘எம் புதல்வா வாழி! வாழி! எனும்படி வீரானவேல் தர’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி முருகன் வேலாயுதம் பெற்றது பற்றி இரண்டு கருத்துகள் இருப்பினும் இரண்டையும் ஒன்று சேர்த்து முருகனுக்கு சிவபெருமான் வேலாயுதத்தைத் தர, பராசக்தியான உமாதேவியார் அதற்கு அளப்பரிய சக்திகளைக் கொடுத்தாள் என்று ஆன்றோர் கூறுவர்.

(இதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்கோலக்காவில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பொன் தாளம் தர அதற்குப் பெருமாட்டி ஓசைதந்து ஓசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்று விளங்குவதைக் கூறுவர்.) கதைகள் பல இருப்பினும் தாய் தந்தையார் அளிக்க வேலாயுதத்தை முருகப் பெருமான் வேலைப் பெற்றார் என்பதும், பகைவரை அழித்து உலகிற்கு நன்மை பயக்கச் சிவசக்தியர் அருளாக வேல் பிறந்தது என்பதும் எண்ணி மகிழத்தக்கதாகும்.

அன்னை சக்தியிடம் முருகன் வேல்வாங்கும் ஐதீக நாடகம்

தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப்பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக்கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்பது பெயர்.

ஸ்கந்தா சரணம் ! ஸ்கந்தா சரணம்…!
சரவணபவ குஹா சரணம்…!

The post கந்தர் சஷ்டி ஸ்பெஷல்! வேலாயுதம் தோன்றிய வரலாறு ! appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>