16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ஹபூபாலன் மற்றும் அவனது அரசவைப்புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் காட்சி தருவதைக் கண்டார்.
அவ்வூர் மக்களிடம் இது பற்றி வினவிய போது ‘ஒரு ஞானி வருவார். அவர் ஐயப்பதேவனின் சிந்தனையைச் சொன்னவுடன் மூக்கிலிருந்து கையை எடுத்து விடுவார் எங்கள் ஐயப்பன்’ என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர். உடனே அரசன் அவைக்களப்புலவரைப் பார்க்க, அவர் பாட, மூக்கிலிருந்து கை எடுக்கவில்லையாம் சாஸ்தா. அப்பையதீட்சிதரை அரசன் நோக்க, அவர்,
அன்னையாம் அரவணையான், அபிராமவல்லி, இருவரையுமே யான்
இன்சொல் பேசி அம்மே என்றுமே இன்புற்று, கைலாச நாதனாய
பொன்னார் மேனிப்பெருமானை தந்தையெனவும் விளித்ததனால், வைகுண்ட
மின்னிடு பதியுற்றால் மிளிருமெழில் ஸ்ரீதேவியை எப்படி அழைப்பேனோ?
என்று பாட சாஸ்தாவின் மூக்கிலிருந்து கை எடுக்கப்பெற்று விட்டதாம்! ஐயப்பனுக்கு திருமால் அன்னை என்றால் திருமகள்? இந்த வினாவின் விடையைச் சொல்ல வல்லவர் யார்?
இந்த வினாவினூடே நாம் அபரிமிதமான இறையருளின் திருவிளையாடல்களை இனங்கண்டு கொள்ளலாம். இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும் அம்மூர்த்திகளிடையே பேதங்கள் பார்த்து ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும் நம் சந்தோஷத்திற்காகவும் நாம் அறிவு பூர்வமான நீதிகளைப் பெறவுமே அன்றி அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. எல்லோரும் அப்பைய தீட்சிதரின் திறனையும் அறிவையும் பாராட்டினார்களாம் என்று ‘தீட்சிதேந்திரம்’ என்ற நூல் சொல்கிறது. இந்தக் கதை நம்மூர்களில் மிகப்பிரபலமாக உள்ளது. இது போல ஐயனார் பற்றிய பல கதைகளும் இருக்கலாம். சாஸ்தா என்பதற்கு மக்களின் மனங்களில் ஊடுருவியவர் என்றும் பொருள் சொல்வதுண்டல்லவா?
ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம் சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.
இந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் த்யானரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது.
இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.
இவ்வாறாக, ஐயனார் -ஐயப்பன் வணக்கம் பல்வகைப் பட்டு பலவாறாக பலராலும் பல்வேறு நிலைகளில் செய்யப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரை கிராமதேவதையாகவும் காவல் தெய்வமாகவும் கண்டிருக்கிறார்கள். அவரே முழுமுதற்பொருள் என்று பூஜை செய்தும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆக, ஐயன் அவரவர் தத்தம் அறிவின் வண்ணம் எப்படி எப்படி வணங்குகிறார்களோ அப்படி அப்படிக் காட்சி தந்து அவரவர் நிலைக்கேற்ப அருளி வந்திருக்கிறார் என்றே கருத முடிகின்றது.
பொதுவான வழக்கில் உள்ள கதையின் படி ‘நேபாளதேசத்து அரசனான பலஞனின் மகளான புஷ்கலையை அவனின் வேண்டுகோளின் படி ஐயன் மணந்தார் என்றும், வஞ்சி மாநகராண்ட பிஞ்ஞகன் என்ற அரசனின் வேண்டுகோளை ஏற்று அவனின் மகள் புஷ்கலையை ஐயன் ஏற்றார் என்றும்’ சொல்லப்படுகிறது. இவர்கள் ஸத்தியபூரணர் என்ற முனிகுமாரத்திகள் என்றும் சில நூல்கள் சொல்வதாக அறியக்கிடக்கிறது.எது எப்படியோ இருமையின்பத்தையும் அருளவல்ல பெருமான் இருதேவியருடன் காட்சி தருவது ஏற்கத்தக்க விடயமாக தெரிகிறது. இதனை தத்துவார்த்த நோக்கில் அவதானித்து ஸத்தியத்தை அறிய வேண்டும்.
ஆகம வழிப்பட்ட வழிபாடுகளைப் பெறும் ஐயனாரைப் பற்றி நோக்கும் போது நம் ஊர்களின் ஆகம நெறிப்பட்ட வகையில் ஐயனாருக்கு பேராலயங்கள் சமைத்துக் குடமுழுக்காட்டி வழிபாடாற்றியும் வந்திருப்பதைக் காண்கிறோம். வடஇலங்கையில் அனலைதீவு என்ற தீவிலும் ஊர்காவற்துறையிலுள்ள சுருவில் கிராமத்திலும் மேற்சுன்னாகம் பகுதியிலும் காரைநகரின் வியாவிலிலும் அளவெட்டியிலும் ஐயனாருக்கு பலநூறாண்டுகள் பழைமையான சிவாகம வழியில் அமைந்த சிவாகம வழியில் பூஜிக்கப்படும் ஆலயங்கள் உள்ளன.
வியாவில் ஐயனார் கோயில் பற்றி ‘ஆறுமுகநாவலர் / ஈழத்துச் சிதம்பர தலபுராணம்’ என்ற இத்தளத்தில் வெளியான முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் கட்டுரையிலும் பல செய்திகளைக் காணலாம். அனலை தீவில் இன்றும் தான்தோன்றியான ஒரே கல்லில் அமைந்ததும் கடலில் மிதந்து வந்ததுமான பூரணை புஷ்கலை உடனாய ஐயப்பன் திருவுருவம் உள்ளது. பாரம்பரியமாக இக்கோயிலில் கொடியேறி சிவாகமப்படி மஹோத்ஸவம் வருடாந்தம் நடைபெற்று வருகிறது. சுருவில் என்பது ஐயனாரின் கரவில் அல்லது கருவில் ஊன்றிய இடம் என்று சொல்கிறார்கள். .இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் பாவில் ஒரு பாடல்
நந்தவன வாவிமலி நாடுங் காடும் நல்லவனாய் பூவுலகைக் காக்க வேணிச்
சங்கரனார் மோகினியாம் அரியோடாட சாந்திமிக அவதரித்த காந்தமூர்த்தி..
என்று ஐயனின் அவதாரத்தைப் பேசுவதைக் காண முடிகின்றது.
சபரி மலைக்கு வந்த சாஸ்தா யார்?
– சபரிமலை யாத்திரை தொடரும்….
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சபரிமலை யாத்திரை பாகம் –17 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.