“புல்லாகி, பூடாய், புழுவாய் மரமாகி
பறவையாய் பாம்பாய் பல்விருகமாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி, முனிவராய்,தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்“பெருமான்”
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்துள்ள இஞ்சிமேடு பெரியமலை கிராமத்தில் முனிவர் வேடத்தில் சித்தரை வரவேற்று தொடர்ந்து விளக்கேற்ற சொன்னார் சிவபெருமான். நெய்தீப முனிவர் என்று பின்னாளில் போற்றப்பட்ட திரு.இராஜா என்கிற இராஜா சுவாமிகள் சிவத் தொண்டனாக 16 வயதிலிருந்து இஞ்சிமேடு பெரியமலை சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வந்தார். இவருடைய பார்வையில் பறவைகளும், தாவரங்களும்,மரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றுதான். உயிர்களிடத்தில் இவர் வைத்த நேசம் ஓப்பற்றது. தாம் எந்த மாதிரி உணவு உண்பாரோ அதே உணவை பணியாட்களுக்கும் பரிமாறவேண்டும் என்பார். இவர் மக்களின் பிணித் தீர்க்கும் சித்தராவார். பின்னர் இவர் 96 வயதில் ஜீவ சமாதி அடைந்தார்.
இவருடைய மூதாதையர்கள் இவர் பிறந்த இஞ்சிமேட்டு கிராம நாட்டாண்மை பொறுப்பை ஏற்று சிறப்பாக கிராம நிர்வாகம் செய்து வந்தவர்கள். முற்பிறப்பின் பயனால் திரு.இராஜா அவர்கள் பொன்னன் என்ற திருப்பெயரோடு, பரசுராமன்- பச்சையம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாக 1900 ஆம் ஆண்டு பிறந்தார். இராஜா சுவாமிகளின் சந்ததியினர் தெய்வ வழிபாட்டில் அதிக நாட்டம் கொண்டு, உமா மகேசுவரியின் திருப்பெயர்களில் ஓன்றான மாரியம்மனை வழிபட்டு வந்தனர். பரம்பரைத் தொழிலான பம்பை, உடுக்கை வர்ணிப்பதைச் செய்து தொண்டாற்றி திருவிழாக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தவராவார்கள்.
திரு.இராஜா சுவாமிகள் இரண்டாம் வகுப்பு வரையில் தெருத் திண்ணையில் படித்து, மணலில் எழுதி படிக்க கற்றுக்கொண்டவர், தமிழ் இலக்கியங்களில் அதிக நாட்டம் கொண்டதோடு பக்தி பனுவல்களை மனப்பாடம் செய்து அப்படியே மெய்யுருக பாடுவதிலும் வல்லவராக திகழ்ந்தவர். நாடகங்களில் நடிப்பவர்களுக்கு இவரே அவர்கள் சார்பில் பாடல்கள் பாடி பொதுமக்களை மகிழ்வித்தவர். தாமும் பக்தி நாடகங்களில் நடித்தவர். தம் தந்தையாருக்கு விவசாயத் தொழிலுக்கு முழுவதும் உறுதுணையாக நின்று உழைத்தவர். தமது தாயார் பச்சையம்மாளின் அன்பை மிகவும் கவர்ந்தவர். குடும்பத்தில் முதல் பிள்ளையாக எழுவரோடு பிறந்த இவரின் பொறுப்புகளும் கடமைகளும் அதிகமாகவே இருந்தன.
தந்தைப்பட்ட கடன் தனயனால் தீர்ந்தது :-
தம் தந்தை பரசுராமன் பட்ட கடனைக்கட்ட முடியாததால் தம் சொந்த நிலத்திலேயே தந்தையாரோடு தம் குடும்பத்தார் அனைவரும் குத்தகை அடிப்படையில் பயிர் செய்து கடனை அடைக்க ஓப்புக்கொண்டதன் பேரில் கடனை எப்படியாகிளும் ஆடைத்து விட வேண்டும் ஏன்ற காரணத்தினால் தம் தம்பிகளையும், குத்தகை அடிப்படையில் அந்தணர் நிலங்களில் பயிர் செய்ய அனுப்பினார். கடவுள் அருளால் நல்ல விளைச்சல் விளைந்தும், ஆறில் ஓரு பங்கை முறைப்படி கொடுக்காமல் அந்தணர் செய்த சதியால் தமக்கு வரவேண்டிய பங்கு வரவில்லை என்று நொந்த இராஜா சுவாமிகள் இருந்த சூழ்நிலையில் அந்தணர்களையும் எதிர்க்க முடியாமல், கடனை அடைக்க வழி கிடைத்தும், விதி வசத்தால், அடைக்க முடியவில்லையே என்று நொந்து செய்வதறியாது திகைத்தார். அப்போது அவருடைய கண்ணிலே வெட்ட வெளியிலே மலை மீது நின்ற சிவலிங்கம் தோன்றவே, தம் குறைகளை அச்சிவபிரானிடமே முறையிடவேண்டும் என்ற நோக்கோடு பூசைப் பொருட்களை வாங்கி ஓரு துண்டில் முடிந்து, தோள் மீது போட்டுக் கொண்டு பெரிய மலைக்குச் சென்றார். அப்போது உலக இரட்சகர், அடியார்களை ஆதரிக்கும் அருட்கடவுள் முனிவர் வேடம் தாங்கி, மலையடிவாரத்திலே ஈராஜாவை வரவேற்றார்.
இராஜா, அண்ணலின் முகம் பார்த்தவுடனேயே, “சிவனே மகானாக வந்தாரோ” என்று உள்ளத்திலே நினைத்து அவர் திருப்பாதங்களிலே பணிந்து வணங்கிட, முனிவர் அவரைப்பார்த்து “என்ன இவ்வளவு தூரம், ஏன் ஏதோ இழந்ததைப் போல் பதற்றமாக இருக்கிறாய்; போய் மலையில் உள்ள தீர்த்தம் எடுத்து நீயும் குளித்து விட்டு ; சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்! நான் பிறகு வருகிறேன்” என்று கூறி விட்டு சென்றார்.
இராஜா அப்படியே செய்த பின், முனிவர் வேடம் தாங்கிய சிவனார், “ராஜா நீ வாங்கி வந்துள்ள கற்பூரத்தை ஏற்றி, தேங்காய் உடைத்து, கண்ணை மூடிக் கொண்டு என்னென்னவெல்லாம் முறையீடு செய்ய வந்தாயோ, அதை தூய மனதுடன் முறையீடு செய் !” என்று அருள்வழி காட்டினார். ராஜாவும் அப்படியே செய்ய உடைத்த தேங்காயில், பூ இருப்பதும், சரி பாதியாக தேங்காய் உடைந்திருப்பதும், பார்த்து இறைவனார் “ராஜா நீ வேண்டியது அப்படியே நடக்கும்! நல்ல சகுனங்களை இறைவன் உனக்கு அருள்பாலித்துள்ளார் ! நீ என்ன வேண்டினாய்? ” என்று எல்லாம் தெரிந்த இறைவனார் ஓன்றும் தெரியாததுபோல் தன் பக்தனிடம் கேட்டார்!
பக்தனும், சுவாமி நான் விவசாயி ! நிலங்களைப் பறிகொடுத்து விட்டேன்! என் நிலத்திலேயே குத்தகை செய்கிறேன் இந்த நிலை மாறவேண்டும்! என் சொந்த காலிலேயே நிற்க வேண்டும்! இது நிறைவேறினால் இந்த மலை மீது சுமார் 500 ஆண்டு காலமாக வெட்டவெளியில் பூசையின்றி நிற்கும் எம்பெருமானின் சிவலிங்கத்தைச் சுற்றி கோயில் கட்ட முயல்வேன்! “என்னால் முடியாவிட்டாலும், எனக்கு பிறக்கும் பிள்ளைகள் மூலமாகிலும் திருக்கோயில் கட்டும் பாக்கியத்தை நீயே அருள வேண்டும் என்று வேண்டினேன்!” என்றார்.
இறைவனும் “நல்லது ; நீ நினைத்து வேண்டியபடி உன் வாழ்வில் நல்லதே நடக்கும் ; இறைவன் என்றும் துணையிருப்பான் ! நீ வேண்டியது அப்படியே நடக்க வேண்டும் என்றால், “இனி வாழ்நாள் முழுதும் சத்தியமே பேசவேண்டும்; நீ எங்கிருந்தாலும், மலையிருக்கும் இத்திசையை நோக்கியேனும் வணங்கவேண்டும்! ஆண்டிற்கு ஓருமுறை கார்த்திகைத் திருநாள் பௌர்ணமியன்று, விரதமிருந்து, ஓரு முறை உன்னால் முடிந்த அளவிற்குப் பசுநெய் வாங்கி, உன் உயிர் உள்ளவரையில் தப்பாமல் தீபம் ஏற்றி வரவேண்டும்!” என்றும் அருள் புரிந்தார்.
“பைத்தியமே” என்று எட்டி உதைத்த ஆங்கிலேய துரை :-
இராஜா தன் நிலங்களை மீட்க வேண்டுமானால், இங்கு கூலிக்கு வேலை செய்து கடனை அடைக்க முடியாது என்று முடிவு செய்து, மலேசியா நாட்டிற்கு சென்ற கப்பலிலே வேலைக்குச் சென்ற மக்களுடன் தானும் ஏறி சென்றுவிட்டார். அங்கு “பிணாங்கு” என்ற பகுதியிலே கணக்கராகப் பணியில் அமர்த்தப்பட்டார்! ஆங்கிலேய ஆட்சியின் கீழ்வரும் இம்மலாயப் பகுதியில் ஆங்கிலேய ஆட்சியாளர்,இராஜா தினமும் தன் வேலையை தொடங்கும்முன் இந்திய நாட்டின் திசை நோக்கி வணங்குவதை கண்டு கேலி புரிவார்! உங்கள் கடவுள் என்னச் செய்வான் என்று ஏளனம் செய்வார்!
இராஜா, “நான் வழிப்படும் எம்பெருமானைப் பற்றி ஏதும் தவறாக பேசாதே! என்னை எப்படி யாகிலும் பேசு; தூற்று;” என்று கெஞ்சி கேட்பார்! “அடே இராஜா போடா பைத்தியமே” என்று அந்த திசை நோக்கி உதைப்பதுபோல் காலை உதைத்து காட்டினான்!. இராஜாவும் மிக நொந்து, “சுவாமி இன்றைய தினத்திலிருந்து எண்ணி 15 நாட்களில் நீயே அழைத்து மன்னிப்பு கேட்கும்படியானச் செயலை என் இறைவன் உன் வாழ்வில் நடத்திக் காட்டுவான்!” இது என் ஐயன் மேல் ஆணை என்றார்!.
அதே போல் ஆங்கிலேய துரைச் செல்லும் குதிரை ஓரு நாள் எதையோ கண்டு மிரண்டு அதன் மீது அமர்ந்திருந்த துரை கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொண்டான்! அதன்பின் அவன் தன் தவறை உணர்ந்து சிவபெருமானின் மகிமை அறிந்து, தப்பை ஓப்புக் கொண்டு, இராஜா இழந்த நிலங்களை மீட்க பொருளுதவி செய்து தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தார்!
இராஜா ஊருக்குத் திரும்பிய பின், தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்து நிலங்களை மீட்டு, பழையபடி தமது தம்பிமார்களுடன், சொந்தமாக பயிர் செய்ய ஆரம்பித்தார்.அதன் பின் தொடர்ந்து 70 ஆண்டுகள் இறைவனிடம் வேண்டி கொண்டபடியே, செவ்வனே மலை மீது “நெய்தீபம்” ஏற்றி வந்தார். அதனால் இவர் “நெய்தீப முனிவர்” என்றும், “பெரிய அண்ணன்” என்றும் ஊர்மக்களால் போற்றப்பட்டார்.
இறைவன் திருவருளால், அவரது பிள்ளைகளும் அவர் வேண்டி கொண்டபடியே படித்து பெரிய உத்தியோகத்தில் அமர்ந்தனர். எனவே அவர் கேட்டுத் கொண்டதற்கு இணங்க, அவரது காலத்திலேயே கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழாவை அவரின் இளையமகன் அருட்செல்வன் இரா.பெருமாள் இ.ஆ.ப., முன் நின்று செய்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் 30 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி 2012-ல் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அடிக்கல் நாட்டிய 6 மாதங்களிலே, திருப்பணி தொடங்கும் முன்பே, தமது 96வது வயதில் இராஜா சுவாமிகள் சிவன் திருவடிகளைச் சேர்ந்தார்!
நெய்தீப முனிவரின் ஜீவ சமாதி:-
அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே தான் இறந்த பிறகு தன்னை எரிக்காமல் சித்தர்கள் மரபுப்படி மண்ணில் புதைத்து சமாதி எழுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்றிருந்தவர் என்ற காரணத்தால், கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஓருவரது உயிர் பிரிந்த பிறகு மண்ணிலே பிறந்த இந்த உடலை மண்ணிற்கே இரையாக்க வேண்டும் என்ற சித்தர்கள் கொள்கையை அறிந்திருந்தார். ஆனாலும், அவர் இறந்தபோது, அவர் தமது பெற்றோருக்கு மூத்த மகனாக இருந்தால், ஊர் வழக்கப்படி அவரது உடலை மண்ணில் புதைக்காமல் எரிக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் வற்புறுத்தினர். சித்தர்கள் மரபுப்படி அவரை மண்ணில் புதைத்து சமாதி எழுப்ப வேண்டும் என்று அவரது இளையமகன் அருட்செல்வர் இரா.பெருமாள் தீர்மானித்தார். பின்னர் நெய்தீப முனிவருக்கு பெரியமலை அடிவாரத்தில் திருமணிச்சேறை உடையார் ஆலயத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கு தெரிகின்றதுபோல மண்ணில் புதைத்து கிரானைட் கற்களால் சமாதி கட்டப்பட்டது. இப்போதும் அந்த சமாதியை, கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் வணங்கிவிட்டு செல்கின்றனர்.
அமைவிடம் :-
அருள்மிகு.திருமணி நாயகி உடன் திருமணிச்சேறை உடையார் அறக்கட்டளை,
இஞ்சிமேடு. வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு :-
தவத்திரு சிவயோகி. இரா.பெருமாள் சுவாமிகள், இ.ஆ.ப.(ஒய்வு)
செல் – 09844224989, 09739301234
www.injimedushivatemple.com
செய்தி : ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்
The post முனிவர் வேடத்தில் “சித்தரை வரவேற்ற” சிவபெருமான் ! appeared first on Swasthiktv.